இவ்வூர் முழுவதும் ஆமணக்குச் செடிகள் நிறைந்த காடாக இருந்தது. ஆமணக்கு கொட்டைச் செடியின் கீழ் சிவபெருமான் எழுந்தருளியதால் இந்த ஊர் 'கொட்டையூர்' என்று அழைக்கப்படுகிறது. சோழ அரசன் ஒருவனுக்கு சிவபெருமான் கோடிலிங்கமாகக் காட்சி கொடுத்ததால் இத்தலத்து மூலவர் 'கோடீஸ்வரர்' என்று வணங்கப்படுகின்றார்.
மூலவர் 'கோடீஸ்வரர்' என்னும் திருநாமத்துடன், லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். மூலவர் திருமேனியில் கோடி சிறிய லிங்கங்கள் அமைந்துள்ளது சிறப்பாகும். அம்பிகை 'பந்தாடு நாயகி' என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள்.
ஆமணக்குச் செடியின் கீழ் அமர்ந்து ஆத்ரேய மகரிஷி தவம் செய்ததால் 'ஹேரண்ட முனிவர்' என்னும் பெயர் பெற்றார். ஆத்ரேயக் கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் வழிபட வேண்டிய கோயிலாகும். அருகில் உள்ள திருவலஞ்சுழி தலத்தில் வலமாக ஓடிய காவிரியில் இறங்கிய ஹேரண்ட முனிவர் இங்கு வெளிவந்ததாகக் கூறுவர்.
இக்கோயிலில் நவக்கிரகங்கள் தங்களது வாகனங்களுடன் காட்சி தருகின்றனர்.
இராமர், பிரம்மா, தேவேந்திரன், நாரதர், மார்க்கண்டேயர் ஆகியோர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகனை தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
திருநாவுக்கரசர் ஒரு பதிகம் பாடியுள்ளார். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.
|